தாம்பரம்:''ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சம்பந்தமாக, மாணவர்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை. எப்போதும் போலவே, இந்த தேர்வும் நடக்கும்,'' என்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈஷா பசுமை பள்ளி இயக்கம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்திய, மூன்றாம் ஆண்டு மரக்கன்றுகள் நடுதல் நிறைவு, ஈஷா பசுமை பள்ளி விருது வழங்குதல் மற்றும் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் விழா, தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் நேற்று நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது காலங்களில், தங்கள் பிறந்த நாட்களில், மரக்கன்றுகளை நட்டு, வரலாறு படைத்தனர்.
அந்த வகையில், ஈஷா மையமும், தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, மரங்களை நட்டு, பணி செய்து வருகிறது.ஈஷா மையம், இதுவரை, 40 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, வரலாற்று படைத்துள்ளது. இது, மேலும் உயர, தமிழக பள்ளிக் கல்வித்துறை உதவி செய்யும். கேரள மாநிலத்தில், 38 சதவீதம் இயற்கை வளங்கள் உள்ளன.தமிழகத்தில், 15.5 சதவீதம் இயற்கை வளங்கள் மட்டுமே உள்ளன. இதற்கு, கேரள மாநிலத்தில், அடிக்கடி மழை பெய்வதே காரணம்.
இயற்கையோடு வாழ்வதற்கு, மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். இதை, ஒவ்வொருவரும் ஊக்கத்தோடும், ஆக்கத்தோடும் செய்தால் தான், அடுத்த சந்ததியினர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சம்மந்தமாக, மாணவர்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை. இதற்கான ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில், தேவையில்லாமல் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். எப்போதும் போலதான், இந்த தேர்வும் நடக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மரக்கன்றுகள் வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட, 35 பள்ளிகளுக்கு, ஈஷா பசுமை பள்ளி விருது வழங்கப்பட்டது.ஈஷா பசுமை பள்ளி இயக்கம், தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து, பசுமை பள்ளி எனும் சுற்றுச்சூழல் திட்டத்தை, 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மரக்கன்று வளர்ப்பு மூலம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments