மூத்த அதிகாரி உதயசந்திரனை (இ.ஆ.ப) கொரானோ காலச் சிறப்பு அதிகாரியாகச் சென்னை நகரத்தை இணைக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள் என்ற அரசு அறிவிப்பானது மகிழ்வான ஒன்று. இதுபோலப் பல மூத்த அதிகாரிகளையும் அவசர கால சிறப்பு அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள்.
எடுத்துக்கொள்ளும் வேலையை மிகுந்த உத்வேகத்துடனும், ஆத்மார்த்தமாகவும் செய்ய விரும்பக் கூடியவர் உதயசந்திரன். கடந்த ஆண்டு, பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்தபோது - காலச்சுவடு நேர்முகத்திற்காக - பெருமாள்முருகன் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கேள்வி முன்வைக்கப் பட்டது. எதிர்பாராமல் நானும் உடனிருக்கும்படி ஆனது.
"பல துறைகளில் உயர் பதவிகளில் செயலாற்றி இருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்குப் பிடித்த பணி எது?"
"மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் பணிதான் மனதிற்கு நெருக்கமானது. ஏனெனில் அவர்களுக்காக நேரில் உடன் நிற்கலாம். முடிந்த மட்டும் நேரடியாகவே அவர்களின் குறையைத் தீர்க்கலாம்" என்றார்.
இதோ, கொரானோ காலத் தொற்றூழ் அவரை அழைக்கிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு மக்களுக்காகக் களம் காண இருக்கிறார். மிகுந்த சவாலான பணி. நெருக்கடியான தருணமும் கூட.
உலகமே மரண அபாயத்துடன் தொட்டுப்பிடி விளையாட்டை விநோதமாக முயற்சிக்கிறது. தொற்று நீக்கிகள் வரத் தாமதம் ஆகலாம் என்கிறார்கள். எனினும் தடுப்பாட்டம் ஆடி ஒரளவிற்குச் சமாளிக்க முடியும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சிறப்பு அதிகாரியாகக் களமிறங்கும் இந்திய ஆட்சிப் பணியாளர் உதயசந்திரனை அன்புடன் வரவேற்போம்.


0 Comments