இன்று ஒரு தகவல்!!எதை விதைக்கிறோமோ..


எதை விதைக்கிறோமோ..

மலைப் பகுதியில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு சின்னஞ்சிறு பையன் இருந்தான்.

அவன் ஒருநாள் தன் அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு, ‘நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினான்.

போனவன் வீட்டுக்கு வெளியே ஓரிடத்தில் நின்றுகொண்டு, ‘நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று உரக்கக் கத்தினான்.

அது, மலைப்பகுதி என்பதால்... அவன் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப நான் உன்னை வெறுக்கிறேன்’ - நான் உன்னை வெறுக்கிறேன்’ - நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று எதிரொலித்தது.

ஆனால், பாவம். சின்னஞ்சிறு பையனாகிய அவனுக்கு... அது அவனுடைய குரலின் எதிரொலிதான் என்று தெரியவில்லை. பயந்துபோனான்... 

 உடனே வேகமாக வீட்டுக்கு ஓடிச் சென்று அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதான்... தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்தான்.

"ஏன் இப்படிப் பயப்படுகிறாய்?" என்று அம்மா கேட்டாள்.

"இந்த மலையில் நிறைய கெட்டப் பையன்கள் இருக்கிறார்கள் அம்மா. அந்தப் பையன்கள் எல்லோரும், ‘நான் உன்னை வெறுக்கிறேன்... நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று கத்துகிறார்கள்" என்றான் அந்தச் சிறுவன்.

அவனுடைய தாய்க்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது.

அவள் புத்திசாலி. அவள் என்ன நடந்தது என்பதையும் விளக்கிச் சொல்லவில்லை. அவள் மகனைப் பார்த்துச் சொன்னாள்...

"இப்போது நான் சொல்கிறபடி செய். நீ முன்னால் நின்ற இடத்தில் போய் நின்றுகொண்டு, ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று உரக்கச் சொல்" என்று கூறி அனுப்பிவைத்தாள்.

அவனும் அம்மா சொன்னபடியே அதே இடத்தில் போய் நின்றுகொண்டு, ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று உரக்கக் கத்தினான். அவன் சொன்ன வார்த்தை திரும்பத்திரும்ப எதிரொலித்தது.

பையனுக்கு இப்போது அளவில்லா சந்தோஷம்.... ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று மறுபடி மறுபடி சொல்லி குதூகலித்தான்.

இது சிறுவர்களுக்கான கதைமட்டுமா... நமக்கானதும்தான்..!

ஆம் நண்பர்களே, இந்த உலகத்துக்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ... அதுதான் நமக்குத் திரும்ப வரும் என்பதுதான் இந்தக் கதை உணர்த்துகின்ற செய்தி! எனவே நல்லனவற்றையே கொடுப்போம்... நல்லனவையே திரும்பக் கிடைக்கும்!

 விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? என்பதும் நல்லதை விதைப்பவன் நல்லதையே அறுவடை செய்கிறான்! என்பதும் நம் முன்னோர் சொன்ன பழமொழிகள்!

அறிவோம்...
தெளிவோம்..!

வாழ்க வளமுடன்..

Post a Comment

0 Comments