கேரளாவில் பள்ளியிலிருந்த லேப்டாப் உள்ளிட்டவற்றைத் திருடன் திருடிச் சென்றதால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதைத் திருப்பித் தரும்படி ஆசிரியர்கள் சமூக ஊடகத்தில் உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணனூரில் உள்ள தலசேரியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறைக்குள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், விலை உயர்ந்த காமரா, பணம் ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்றான். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால், திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மீண்டும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே நுழைந்துள்ளார். அங்கு இருந்த லேப்டாப், பென்டிரைவ், எக்ஸ்டேர்னல் ஹார்டிஸ்க் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து மீண்டும் போலீசில் புகார் செய்யப்பட்டது. சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது திருடப்பட்ட பென்டிரைவ், லேப்டாப்பில்தான் ஆசிரியர்களின் ஜனவரி மாத வருகை தொடர்பான தகவல்கள், டிஜிட்டல் வருகைப் பதிவு கையெழுத்துக்கள் இருந்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்துக்கு அனுப்பினால்தான் ஆசிரியர்களுக்கான சம்பளம் வரும். தற்போது டிஜிட்டல் வருகைப்பதிவு இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிரியர்கள் பயத்தில் உள்ளனர்.
போலீசாரும் குற்றவாளியைப் பிடிப்பது போலத் தெரியவில்லை. இந்த நிலையில், ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து கடிதம் ஒன்றை எழுதி அதை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், "அன்புள்ள திருடனுக்கு, நீ எடுத்துச் சென்ற டிஜிட்டல் சிக்னேச்சல் அடங்கிய பென்டிரைவை மட்டுமாவது திருப்பி அளித்துவிடு.
அதை வைத்துத்தான் எங்களுக்கு சம்பளம் அளிப்பார்கள். சம்பளம் கிடைக்காவிட்டால் வீட்டில் உள்ள குழந்தைகள், வயதான பெரியவர்களுக்கு உணவு, மருந்து வாங்கக் கூட முடியாது. கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிலை வந்துவிடும். தயவு செய்து அந்த பென் டிரைவை கொடுத்துவிடு. இனி வேறு பள்ளிக் கூடத்தில் திருடாதே" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதைப் பார்த்த பிறகாவது திருடன் பென்டிரைவை அனுப்பிவைப்பானா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. சம்பளம் வழங்குவது தொடர்பாக மாற்றுத் திட்டம் உள்ளதா என்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
0 Comments