உடுமலை:கல்வியாண்டு துவங்கியதும் 'எமிஸ்' பதிவு, அரையாண்டு முடிந்ததும், ஆன்லைனில் பதிவு சரிபார்ப்பு என, கற்பித்தல் இல்லாத பணிகளின் நெருக்கடியால், பொதுத்தேர்வு நெருங்கினாலும், மாணவர்களுக்கு நுாறு சதவீத பயிற்சி வழங்க முடியாமல் ஆசிரியர்கள் மனவேதனையில் உள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்றல் சூழலை எளிமையாக்கவும், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பள்ளியின் பதிவேடுகளை பராமரிப்பது மற்றும் மாணவர்களின் விபரங்களை கல்வித்துறையில் சமர்ப்பிக்கும் பணிகளும் ஆசிரியர்களுக்கானது. இதுதவிர, 'எமிஸ்' இணையதளம், பொதுத்தேர்வு பட்டியல், நலத்திட்டங்களில் பயன்பெறும் மாணவர்களின் பட்டியல், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு என ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கான கற்றல் இணை செயல்பாடுகளைப் போல, கற்பித்தல் அல்லாத செயல்பாடுகள் வழங்கப்படுகிறது.துவக்கநிலையில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கும் பள்ளிகளில், ஒருவர் இப்பணிகளை கவனித்துக்கொள்ள, மற்றவர் மட்டுமே பாடம் நடத்த முடியும், என சுழற்சி முறையில், மாற்றி மாற்றி பாடங்களை எடுப்பதும், பணிகளை கவனிப்பதுமாக உள்ளது.மறுபக்கம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பயிற்சியில் பாதி நாட்கள் போக, மீதமுள்ள நாட்களிலும், மாணவர்களுக்கு நுாறு சதவீதம் திருப்தியோடு தேர்வுக்கு பயிற்சி அளிக்க முடிவதில்லை என அதிருப்தி கொள்கின்றனர்.கல்வித்துறையிலும் நவீன மயமாக மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதனால், பெரும்பான்மையான பள்ளிகளில் கல்விச்சூழலும் மாறுபட்டுள்ளது. இருப்பினும், ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதற்கான நேரத்தை விட, அதிக நேரம் இணைப்பணிகளில் செலவிடும் வகையில், பணிகள் முன்னறிவிப்புகள் இல்லாமல் தொடர்ந்து வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில்,'' பயிற்சிகளும், வேறு இணைப்பணிகளும் தவிர்க்க முடியாத செயல்கள் தான். ஆசிரியர்கள் பயிற்சி பெறுவது, அவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துகிறது. அதேபோல், மற்ற பணிகளை கவனிப்பதற்கும் ஆசிரியர்கள் சிரமப்படுவதில்லை. ஆனால், அவை, முன்னறிவிப்பில்லாமல் வழங்கப்படுவதால் தான், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. கல்வியாண்டு துவங்கும்போதே, என்னென்ன பதிவேடுகளை தயாராக வைத்திருக்க வேண்டும். பயிற்சிகள் நடக்கும் நாட்கள் குறித்த ஒரு அட்டவணையை கல்வித்துறை வழங்கினால், பாடத்திட்டத்தை நடத்துவதற்கு ஆசிரியர்களும் திட்டமிட்டுக்கொள்ள முடியும்,'' என்றார்.
0 Comments