பள்ளிக்கு செல்ல பஸ் வசதி வேண்டும்: கிராம சபை கூட்டத்தில் குரல் எழுப்பிய 5 வயது பள்ளி சிறுமி


பள்ளிக்கு செல்ல பஸ் வசதி வேண்டும்: கிராம சபை கூட்டத்தில் குரல் எழுப்பிய 5 வயது பள்ளி சிறுமி

சிறுமி சஹானா
மதுரை

கி.மகாராஜன்

கிராம சபையின் உரிமைகளைப் பெரியவர்கள் பலரே அறியாமல் உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தின் கிராம சபை கூட்டத்தில் 5 வயது சிறுமி ஒருவர், 'தனது கிராமத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும்' என குரல் எழுப்பி கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேஉள்ளது மீனாட்சிபுரம். இங்கு குடியரசுதினமான ஜன.26-ல் ஊராட்சித் தலைவர் பாண்டீஸ்வரி சேவுகன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.


மீனாட்சிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்ப்பள்ளம், பூசாரிப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

இவர்களில் பலர் தங்கள் பகுதிக்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர கோரிக்கை விடுத்தனர். இதைக் கூர்ந்து கவனித்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த செரியனா-சித்ராதேவி ஆகியோரின் மகள் சஹானா (5), தன்னிடமும் ஒரு கோரிக்கை இருப்பதாகக் கையை உயர்த்தினார்.


சக தோழிகளுடன் கிராம சபைக்கு வந்திருந்த சஹானா தொடர்ந்து பேசுகையில், "நாங்கள் மீனாட்சிபுரம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறோம். இப்பள்ளியில் படிப்பை முடித்தவர்கள் 6-ம் வகுப்புக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் மாயாண்டிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அங்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதியில்லை. இதனால் மாயாண்டிபட்டி பள்ளிக்குச் செல்ல கூடுதல் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.

சஹானாவின் பேச்சைக் கேட்டதும் கிராம சபைக் கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர். ஊராட்சித் தலைவரும் கூடுதல் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இது பற்றி சஹானாகூறும்போது, பஸ் வசதி இல்லாததால் மாயாண்டிபட்டி பள்ளிக்கு மாணவர்கள் தினமும் நடந்தே செல்கின்றனர்.

வழியில் டாஸ்மாக் கடை வேறு உள்ளது. அதற்குப் பயந்து பல மாணவிகள் காட்டுப்பாதை வழியாக அச்சத்துடன் செல்கின்றனர். இதனால் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம சபையில் கோரிக்கை வைத்தேன்" என்றார் மழலை குரலுடன்.


Post a Comment

0 Comments